Saturday, April 18, 2009

ஈழத்தமிழனுக்குப் போராடும் பார்வையற்ற தோழர்களில் எழுச்சி


மதிமுக அலுவலகம் தாயகத்தில் ஈழத் தமிழினப்படுகொலையை கண்டிக்கும் பெண்கள் அமைப்பினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஈழ ஆதரவு பேசும் பல அமைப்புகள் ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்று ஏற்கெனவே நான் பதிவிட்டிருந்தேன். அதே நேரம் இப்போது அவர்களின் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் பல்வேறு கட்டங்களில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று காலையில் இருந்தே பல்வேறு அமைப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். கூட்டம் கூட்டமாக தோழர்கள் வந்திருந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர். நமது காவல் துறையினர் முகத்தில் ஈ ஆடவில்லை. கடந்த ஐந்து நாட்களாக இந்தப் போராட்டத்தை கண்டு கொள்ளாதவர்கள் இன்று காலையில் இருந்து அங்கு குவிந்து கொண்டு நாட்டாமை செய்து கொண்டிருந்தனர். ஏற்கெனவே கடந்த மூன்று நாட்களாக அந்தப் பெண்களின் போராட்டத்திற்கு தார்மிக ஆதரவு அளித்து வந்த ஈழப்போரை எதிர்க்கும் பார்வையற்றோர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள¢ தோழர் வீரப்பன் தலைமையில் பார்வையற்றோர் இன்றும் வந்திருந்து போரை நிறுத்த கோஷம் எழுப்பினர். பின்னர் உண்ணாநிலையில் இருந்த பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்களுடன் அவர்களும் இணைந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனே போலீஸார் பார்வையற்றோர் என்கிற குறைந்தபட்ச மனிதநேயமும் இன்றி அவர்களை தரதரவென இழுத்தும் அடித்தும் கைது செய்து வேனில் ஏற்றினர். போராடும் தோழர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதால் அவர்களின் போராட்ட குணம் மட்டுப்பட்டுவிடும் என்று அதிகார மட்டம் நினைக்கிறது. ஆனால் இப்படியெல்லாம் செய்வதால் போராட்டம் வலுவடைந்தே தீரும்.

No comments:

Post a Comment