Thursday, January 29, 2009

முத்துக்குமாரின் மரண சாசனம்

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...வணக்கம். வேலைக்குப் போகும் அவரசத்திலிருக்கும் உங்களை சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருத்தப்படுகிறேன். ஆனால் வேறு வழியில்லை. நானொரு பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். உங்களைப்போலவே நானும் தினமும் செய்தித் தாளையும், இணையத்தையும் பார்த்துப் பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன் நான். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ்நாட்டில் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால் மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியாயமென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ராஜீவ்காந்தியைக் கொன்றால் என்ற சொத்தை வாதத்தை வைத்துக் கொண்டு சில தனி நபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது, இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ்காந்தி கொலையில் தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது, ஜெயின் கமிஷன். அப்படியென்றால் நீங்களும் ராஜீவ்காந்தியை கொலை செய்த கொலைகாரர்கள்தானே?ஜாலியன் லாலாபாக்கில் வெள்ளையன் செய்தான். இவர்கள் வன்னியிலும், முல்லைத்தீவிலும் செய்வதென்ன? கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகளின் நினைவு வரவில்லையா? ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட போது, கூட்டணித் தலைவியான ஜெயலலிதா, அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையே ஏன்? இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாலும் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. பணம், அடியாள் பலம் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படிப் பாய்ந்தால் யார் நம் பக்கம்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றார். பிறகு மத்திய அரசைப் புரிந்து கொள்வார்?! பிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார்-_ தமிழ்நாட்டில் உள்ள பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்க விரும்புகிற தேர்தல்காலத் தலைவர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.பட்டினிப்போராட்டம் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கு வருந்துகிறேன். உண்ணாவிரதத்தை தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில் சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக் கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள். சிங்கள வன்முறை நுணுக்கங்களை வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள். இந்திய _ இலங்கை ராணுவக் கூட்டு இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானது. மாணவர்களையும், ஜனநாயக அமைப்புகளையும் திரட்டுங்கள். அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். நம் சகோதர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியவர்களல்லவா நீங்கள்! எனக்குச் செய்வதெல்லாம் இருக்கட்டும். ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள். தமிழீழம் என்பது தமிழீழத்தின் தேவை மட்டுமல்ல. அது தமிழகத்தின் தேவையும்கூட. காரணம். ராமேஸ்வரம் மீனவர்கள். தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, கேவலமானவர்களா? பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து தைவான் மீனவர்கள் வழிதவறி சென்னை கடற்கரைகளில் கைது செய்யப்படுவதில்லையா? ராமேஸ்வரத் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?வெளிநாட்டில் வாழ்ந்து வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே... உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடு வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான். போராடிக் கொண்டிருக்கும் எங்கள் சகோதர்களுக்கு உங்கள் ஆதரவும் இருக்கிறது என்பதை மத்திய அரசிற்குத் தெரியப்படுத்துங்கள்.தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்ளே ... அலுவலர்களை ஐயா என நீங்கள் அழைப்பது போன்ற நடைமுறையால் தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எந்த மக்களுக்காகப் பாடுபட விரும்பி இந்தத் துறைக்கு வந்தீர்களோ...அந்த மக்களுக்கெதிராகவே பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக இந்த அரசு உங்களை மாற்றுகிறது. நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கொந்தளிக்கப்போகும் தமிழகத்தில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதுதான்.களத்தில் இருக்கும் தமிழீழ மக்களே விடுதலைப் புலிகளே... உங்களுக்கு அமைந்தது போன்ற ஓர் உன்னதத் தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். தமிழகத்திலிருந்தும் அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். நம்பிக்கைக்குரிய ஒபாமாவே... உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானோ, என் சருமத்திலிருக்கும் கொஞ்சம் வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும¢ வரை இந்தியா வாயே திறக்காது. இலங்கையில் அரசு சொன்னப் பகுதிக்கு வந்த மக்களையும் கொன்றார்களே. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும் செய்யும் கொலையை உங்கள் மௌத்தின் மூலமாகவும் செய்து கொண்டிருக்கிறீர்கள். புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா_ என்னவோ பிரச்னையே புலிகள் ஆயுதம் எடுத்ததால் தான் வந்தது என்பதைப்போல... புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர். மும்பை வெடிகுண்டுகள் உள்ளிட்ட பலவாறாக இந்திய மக்களைக் கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது, இந்திய அரசு. ராஜீவ்காந்தியின் கொலை மறுபடியும் இண்டர்போல் மூலமாக விசாரிக்கப்பட வேண்டும். ராஜீவ்கொலையினால் பயனடைந்தவர்கள், இலங்கை உளவுத்துறை, அவரை ஏற்கெனவே கொலை செய்யமுயன்ற சிங்களச் சிப்பாய் ஆகியோரையும் அதில் சேர்க்க வேண்டும். புலிகளுக்கு ராஜீவ் மீது வருத்தம் இருக்கலாமே தவிர. கோபம் இருந்திக்க வாய்ப்பில்லை. ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களின் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர். புலிகள் ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? எனது பதினான்கு அம்சக் கோரிக்கை1.இந்தியா உடடினாயாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதோடு, மேற்கொண்டு உதவிகள் செய்யக் கூடாது. 2. ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன் தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருப்பதால் ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரத்தை அவருக்கு வழங்கக் கூடாது. 3.புலிகள் மீதான தடை உலகம் முழுவதிலிருந்தும் நீக்கவேண்டும். 4. புலிகள் மீதான குற்றங்களை மன்னிக்க வேண்டும். 5.புலிகளோடு தொடர்புடையது என்ற காரணத்துக்காக தடை செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமத்தை மீட்டுத் தரவேண்டும். 6.ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும். 7.பிரணாப் முகர்ஜி, கோத்தபய ராஜபக்ஷ, சந்திரிகா, பசில் ராஜபக்ஷ, மகிந்த, பொன்சேகா ஆகியோரை நார்கோ அனிலிசிஸ் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். 8.தமிழீழம் யார் தலைமையில் உருவாக வேண்டும் என்பதை தமிழீழ மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும்.9.மலையக மக்கள் புலிகளோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலமே அறியவேண்டும்.10.சென்னையில் குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த டக்ளஸ் தேவானந்தம் தமிழக போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். 11.பத்திரிகையாளர் லசந்தாவின் கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 12. தமிழகத்தில் உள்ள சிங்களப் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு வந்த சிங்களத் தம்பதியினரின் குற்றச்சாட்டு நீக்கப்பட வேண்டும். 14. சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பவங்களுக்கான வாழ்வாதாரங்கள் உறுதி செய்யப்படவேண்டும். அநீதிக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்கள் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள்.. ஆம் உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்த துண்டறிக்கையை நகலெடுத்துப் பரப்புங்கள். என்றும் அன்புடன் அநீதிக்கெதிரான உங்கள் சகோதரன் கு.முத்துக்குமார்.

No comments:

Post a Comment