Thursday, June 11, 2009

கொடி எரிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய பிணை நிபந்தனைகள் சட்டநீதிக்கு புறம்பானவை


இலங்கை அரசு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுத உதவி, நிதி உதவி மற்றும் பன்னாட்டு அரசியல் உதவி ஆகியவற்றை வழங்கி அந்த இனப்படுகொலையில் பங்கு வகித்தது. இதற்கு சனநாயக வழியில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை கடந்த 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய அரசுக் கொடியையும் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டம் அறிவித்தது. கோயம்புத்தூரில் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த 8 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றுடன் 48 நாட்களாக அவர்கள் கோவை நடுவண் சிறையில் உள்ளனர். அவர்களுக்கு பிணை விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. கடந்த 9.06.09 அன்று அப்பிணை மனு மீது ஆணை வழங்கிய நீதிபதி திரு. ஆர். இரகுபதி அவர்கள் மேற்கண்ட 8 பேரும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லைஇ அதற்கு முன்பாக அவர்களைத் தடுத்துக் காவல்துறையினர் கைது செய்து விட்டார்கள் என்ற போதிலும் அவர்களின் நோக்கம் குறித்து கடுமையாகக் கருத வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் ஒரு வாரத்திற்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்திய அரசுக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் ஒரு வாரத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். இந்த இரு நிபந்தனைகளும் நீதிநெறிக்கும் சட்டத்திற்கும் புறம்பானவை. பிணை வழங்கும் போது நிபந்தனை விதிப்பதற்கு ஒரு சட்டக் கோட்பாடு உள்ளது. அது அக்குறிப்பிட்ட வழக்கில் புலனாய்வுக்கு உதவியாக அந்நிபந்தனைகள் அமைய வேண்டும் என்பதாகும். இந்தக் கோட்பாட்டிற்கும் மேற்படி நிபந்தனைகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. மாறாக, ஒரு கொள்கைக்கு எதிராக பழிவாங்கும் தன்மையே மேலோங்கியுள்ளது. பிணை வழங்கும் நிலையில் ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் கருதித் தண்டனை வழங்கக் கூடாது என்பது சட்டநெறி. ஆனால், இவ்வழக்கில் பிணை வழங்குவதற்கு இந்திய அரசுக் கொடியை அவரவர் வீட்டு வாசலில் ஒரு வாரம் ஏற்ற வேண்டும் என்பதும், அநாதை இல்லத்தில் சேவை புரிய வேண்டும் என்பதும் தண்டனை வழங்கும் செயலாகும். தேசியச் சின்னங்களை இழிவு படுத்துவதைத் தடுக்கும் சட்டம் - 1971 பிரிவு (2) - இந்திய அரசுக் கொடியை அவமதிக்கக் கூடாது என்பதற்கான விதியாகும். இந்திய அரசுக் கொடியை ஒருவர் மதிக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்த அந்தச் சட்டத்தில் எந்த விதியும் கிடையாது. எனவே, இந்த ஆணையில் உள்ள நிபந்தனைகள் ஏற்க இயலாதவைகளாக உள்ளன. முறைப்படி உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுச் செய்ய உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தியாகு ஆகியோர் 11.06.09 அன்று சென்னையில் விடுத்துள்ள கூட்டறிக்கை



No comments:

Post a Comment