Tuesday, June 16, 2009

பெரியாரை சாதி சங்கத் தலைவராக்கிய குமுதம்!


குமுதம் அலுவலகம் முன்பு நாளை பெரியார் திராவிட கழகத்தினர் குமுதம் இதழை எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். காரணம் குமுதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும், நான் தமிழன் தொடர்!
அப்படியென்ன அதில் எழுதி விட்டார்கள் என்கிறீர்களா? அந்தத் தொடர் எதைப் பற்றி தெரியுமா? தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சாதிகளைப் பற்றிய வரலாறு. இன்றைய தேதிக்கு நம் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று இதுதான். வெட்கமாகவே இருக்கிறது-. எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்கிறார்கள்.
அதிலும் கடந்த இரண்டு வாரங்களாக நாயக்கர்_நாயுடு சமூகத்தைப் பற்றி வந்துகொண்டிருக்கிறது. இதில் ‘பெரியாரைப் போன்ற ஒரு தலைவரைத் தந்ததற்காக நாயக்கர் சமூகத்திற்கு இந்த நாடு கடமைப்பட்டிருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார், இரா.மணிகண்டன்.ஆகவே தோழர்களே உங்களுக்குத் தெரிந்த நாயக்கர்கள் யாராவது இருந்தால் அவர்களின் கால்களில் உடனே விழுந்து பெரியாரைத் தந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். முடிந்தால், ஒவ்வொருமுறையும் அவர்களைப் பார்க்கும் போதும் அவர்கள் கால்களில் விழுங்கள்.
அதுமட்டுமே எழுதியிருக்கிறார். ‘சாதி சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும் ....... போராடியவர்’ என்று என்கிறார் கட்டுரை ஆசிரியர். எனக்குத் தெரிந்து பெரியார் சாதியை சாடினார்; சாதியை அகற்றத்தானே போராடினார். சாதியில் என்ன சீர்திருத்தம் செய்யவேண்டியிருக்கிறது (வெங்காயம்!).
இதற்கெல்லாம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்! பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுகிறோம் என்று ஒருசிலர் என்னைப் போன்றவர்களை எதிர்க்கலாம். பி.எஸ்.ஜி. நாயுடு மூலமாக இப்போது நடந்து கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.
அதே நிறுவனத்தில் இப்போது நடக்கும் தில்லு முல்லுகள் பற்றி ஆசிரியருக்கு எதுமே தெரியாதா? பலமுறை அந்தக் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். (அந்தக் கல்லூரி முதல்வராக நாயுடுவைத் தவிர வேறு சமூகத்தினர் யாரும் வரமுடியாது) எந்த அனுமதியும் இல்லாமல் கல்லூரிக்கு வெளியே அவிநாசி சாலையில் நகரும் படிக்கட்டுகளுடன் பாலம் அமைக்க (அவர்களின் கல்லூரியை இணைக்கிறார்களாம்) கட்டும் போது அது நடு இரவில் இடிந்து விழுந்து , நல்லவேளை யாரும் சாகவில்லை. அந்தப் பணக்கார ர்களை விட்டுத்தள்ளுங்கள். பெரியாரை சாதிக்குள் அடைக்கப் பார்த்த குமுதம், பெதிகவின் குற்றச்சாட்டுக்கு சொல்லும் பதில் என்ன?
அறிஞர் அண்ணா இடத்திற்கு வந்திருக்க வேண்டிய மிகப்பெரிய சமூக சீர்திருத்த வாதியான எம்.ஆர்.ராதாவையும் இந்த சாதி சங்கத்தில் சேர்த்திருக்கிறார், இரா.மணிகண்டன்.அதிலும், நாயக்கர்_நாயுடு இனத்திற்குப் பெருமை சேர்த்ததாக ஈவிகேஎஸ் இளங்கோவனையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். (அடி செருப்பால!) அதுமட்டுமா? மின் வெட்டுத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சாப்பாட்டு அமைச்சர் ஏ.வ.வேலு, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் (அடக் கடவுளே) இவர்களையும் பெரியார் லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறார்கள்.
இந்தத் தொடர் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ தெரியாது. ஆனால் சமூகத்திற்கு பாடுபட்ட தலைவர்கள் எந்த சாதியில் பிறந்தவர்கள் என்பதை மட்டுமே பட்டியலிட்டுக் காட்டும் அட்டவணை யாகவே இத் தொடர் இருக்கிறது. இது தேவையா? இவரு எங்க சாதி சனம் என்று மார்தட்டிக் கொள்ளும் நம் சமூக அமைப்பில் இது தேவையா? அதிலும் சாதி அடையாளம் இல்லாத சில தலைவர்களையும் இப்படி அடையாளம் காட்டுவது சமூகத்திற்கு நல்லதா? சிந்திக்கட்டும் குமுதம்.

3 comments:

Anonymous said...

கீழ் வரும் கட்டுரைக்கள் குமுதத்தின் கயமையைக் கண்டித்து ஏற்கெனவே எழுதப் பெற்றவை. இதில் நான் எழுதிய கட்டுரையில் பெரியாரையும் இப்படி இழிவு படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டே எழுதியிருந்தேன்.

1. குமுதத்தின் கயமை - விஜய்கோபால்சாமி
2. ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம் - வே. மதிமாறன்
3. ‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு - வே. மதிமாறன்

தங்களது கட்டுரையின் வாயிலாக இவையும் வாசகர்களைச் சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறேன். கட்டுரையின் உள்ளடக்கம் தங்களுக்கு ஏற்புடையது என்றால் இக்கருத்துரையை வெளியிடவும்.

Anonymous said...

தவறு நடந்தால் அதை எட்டிப் பார்ப்பது குமுதம். தவறு நடந்தால் தட்டிக் கேட்பதும் சுட்டிக் காட்டுவதும் நம்முடைய வேலை என்பதால் உங்கள் பின்னூட்டத்தை எல்லோரும் வாசிக்கட்டும்!

Anonymous said...

அன்பின் வெற்றிவேல் அவர்களுக்கு,

தங்கள் கருத்துக்களோடு எங்கள் கருத்துக்களையும் பலரறியக் கொண்டு சேர்த்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Post a Comment